வன பாதுகாப்புக்கான நிதியை குறைக்கும் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து அரசு வன பாதுகாப்புக்கான நிதியை குறைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து அரசு, வன பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தழுவிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை 2027 முதல் குறைக்க தீர்மானித்துள்ளது.
இந்த முடிவு, நாட்டில் கடும் வெப்ப அலைகள் மற்றும் வறட்சி காரணமாக காடுகள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எடுக்கப்பட்டதால், பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019-இல் சுவிஸ் பாராளுமன்றம், காடுகளை வெப்பம் மற்றும் வறட்சிக்கு எதிராக பாதுகாக்க CHF 100 மில்லியன் நிதியை ஒதுக்கியது. இதன் மூலம், அதிக வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கக்கூடிய புதிய மரவகைகள் நடவு செய்யப்பட்டன.
2023-இல் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டாலும், நிதி மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டது. இப்போது, அரசின் புதிய நிதி திட்டத்தில் இந்த நிதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் சுற்றுச்சூழல் அமைச்சரான ஆல்பர்ட் ரோஸ்டி, இந்த நிதியை Federal Office for the Environment (FOEN)-இன் நிதி திட்டத்திலிருந்து நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், Conference on Forests, Wildlife and Landscape (CFP) அமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நிபுணர்கள் எச்சரிக்கை
ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து, காடுகளில் தீப்பற்றும் அபாயம் உயரும் நிலையில், இந்த முடிவு மிகவும் தவறான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஸ்டீஃபன் முல்லர், மையக் கட்சியின் உறுப்பினரும் CFP குழுவின் உறுப்பினருமான இவர், “வன மேலாண்மை செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், நிதி குறைப்பு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.
இந்த முடிவு, சுவிட்சர்லாந்தின் காலநிலை மாற்றத்திற்கான முயற்சிகள் மற்றும் வன பாதுகாப்பு திட்டங்கள் மீது எதிர்காலத்தில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |