சுவிட்சர்லாந்தில் தீ மிதி நிகழ்வில் பங்கேற்ற பலர் மருத்துவமனையில் அனுமதி
சுவிட்சர்லாந்தில் முன்னெடுக்கப்பட்ட தீ மிதி நிகழ்வில் பங்கேற்றவர்களில் 25 பேர் காயங்களுடன் மருத்துவமனையை நாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வடக்கு சுவிட்சர்லாந்தில் சிறப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக சூடான நிலக்கரியின் குறுக்கே நடக்க வைக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இந்த நிகழ்வில் 13 பேர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையை நாடியுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவசர மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் 10 ஆம்புலன்ஸ் சேவைகள் தொடர்புடைய பகுதிக்கு விரைந்துள்ளன.
பல மீற்றர்கள் தொலைவுக்கு உருவாக்கப்பட்ட சூடான நிலக்கரியின் குறுக்கே குழுவினர் நடக்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் வெப்பம் தாங்க முடியாமல் பலர் சிறிது நேரத்திலேயே வெளியேறியுள்ளனர்.
இந்த விபரீதத்தின் பின்னணி தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவப் பகுதியில் இருந்து ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக மத நம்பிக்கை தொடர்பில் இதுபோன்ற தீ மிதி விழாக்கள் முன்னெடுக்கப்படும். மட்டுமின்றி தொண்டு நிறுவனக்கள் சார்பிலும் இதுபோன்ற தீ மிதி விழா முன்னெடுப்பதுண்டு.