புதிய ஓமிக்ரான் தொற்று... நுழைவுக் கட்டுப்பாடுகள் விதித்த சுவிட்சர்லாந்து
அச்சுறுத்தும் ஓமிக்ரான் மாறுபாடு தொடர்பில் தென்னாப்பிரிக்காவில் இருந்து நேரடி விமானங்களுக்கு தடை விதித்துள்ளது சுவிட்சர்லாந்து. பிற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஓமிக்ரான் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே சுவிஸ் சுகாதாரத்துறை இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
கொரோனாவின் ஒமிக்ரான் மாறுபாடானது அதிக அச்சுறுத்தல் மிகுந்தது என அடையாளம் காணப்பட்ட நிலையில், உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. செவ்வாய்க்கிழமை ஜப்பான் நாடு தங்கள் சர்வதேச எல்லைகளை மூட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நேற்றைய தினம் தமது சர்வதேச எல்லைகளை மூடியதுடன், கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை, ஓமிக்ரான் மாறுபாட்டின் முதல் சாத்தியமான தொற்றாளரை சுவிட்சர்லாந்தில் கண்டறியப்பட்டதாக அரசாங்கம் கூறியது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பு திரும்பியவர் முன்னெடுத்த கொரோனா சோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், அது ஓமிக்ரான் மாறுபாடு என்பதும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, தெற்கு ஆபிரிக்காவில் இருந்து நேரடி விமானங்கள் தடை செய்யப்படுவதாக பெடரல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மட்டுமின்றி, ஓமிக்ரான் தொற்று பரவல் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்கா, ஹொங்ஹொங், இஸ்ரேல் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் இருந்து சுவிஸ் திரும்புவோர், கட்டாயம் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பயணிகள் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, பொஸ்வானா, ஈஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் அனைத்து விமானங்களும் காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஆபத்து மண்டலங்களில் இருக்கும் சுவிஸ் குடிமக்கள் அல்லது நிரந்தரவதிவிட உரிமம் பெற்றவர்களுக்கு சிறப்பு அனுமதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.