தடுப்பூசி திட்டத்தில் முந்தும் சுவிட்சர்லாந்து... தடுப்பூசிக்காக சுவிட்சர்லாந்து வரும் வெளிநாட்டினருக்கு கிடைக்குமா?
தடுப்பூசி போடுவதில் சில ஐரோப்பிய நாடுகளை சுவிட்சர்லாந்து முந்திவரும் நிலையில், தடுப்பூசிக்காக வெளிநாட்டினர் சிலர் சுவிட்சர்லாந்துக்கு வர முயற்சி செய்துள்ளனர்.
அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி கிடைக்குமா? சுமார் 165 வெளிநாட்டவர்கள் சென்ற வாரம் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஒன்லைனில் முன்பதிவு செய்துள்ளதாக ஜெனீவா சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, வெளிநாட்டவர்களில் சுவிஸ் மருத்துவக் காப்பீடு வைத்திருக்கும் எல்லை தாண்டி வரும் பணியாளர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.
ஆக, தடுப்பூசிக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்குமா என்ற கேள்விக்கான பதில், உங்களிடம் சுவிஸ் மருத்துவக் காப்பீடு இல்லையென்றால் உங்களுக்கு தடுப்பூசி கிடைக்காது என்பதுதான்!
அதேநேரத்தில், சுவிஸ் மருத்துவமனைகளிலிருக்கும் நோயாளிகளுடன் தொடர்பிலிருக்கும் வெளிநாட்டு மருத்துவத்துறை பணியாளர்களுக்கு, அவர்களுக்கு சுவிஸ் மருத்துவக் காப்பீடு இல்லையென்றாலும் தடுப்பூசி கிடைக்கும்.