சுவிட்சர்லாந்திலேயே விலைவாசி அதிகம் உள்ள நகரங்கள் எவை? ஏன்?
சுவிட்சர்லாந்தின் இரண்டு பெரிய நகரங்கள், ஐரோப்பாவின், சில நேரங்களில் உலகின் அதிக விலைவாசி உள்ள நகரங்கள் பட்டியலில் அடிக்கடி இடம்பிடிக்கின்றன.
அவை, சூரிச்சும் ஜெனீவாவும்...
சூரிச் நகரமும் ஜெனீவா நகரமும் உலகின் அதிக விலைவாசி உள்ள நகரங்கள் பட்டியலில் இடம்பிடிப்பது ஏன்?
பொருளாதாரவியல் நிபுணரான Daniel Dreier என்பவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், சூரிச் நகரமும் ஜெனீவா நகரமும் உலகின் அதிக விலைவாசி உள்ள நகரங்கள் பட்டியலில் இடம்பிடிப்பதன் பின்னணியில் பல காரணிகள் இருப்பதாக தெரிவித்தார்.
அவை என்னென்ன காரணிகள்?
சொத்து விலை மற்றும் வாடகை
ஜெனீவாவைப் பொருத்தவரை, அந்நகரம் பல ஆண்டுகளாக மக்களுக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை உள்ள நகரமாகவே இருந்துவருகிறது.
அதற்கு ஒரு முக்கிய காரணம், ஜெனீவாவின் நில அமைப்பு. அதாவது, சிறிய நகரமான ஜெனீவாவில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கான நிலப்பரப்பு குறைவாகவே உள்ளது.
ஆனால், மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. எனவே, டிமாண்ட் அதிகரிப்பதும் வாடகை மற்றும் வீடுகளின் விலை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
அதே நேரத்தில், சற்றே விலைவாசி குறைவான வழிமுறையும் உள்ளது என்கிறார் Dreier. அதாவது, குறைந்த வருவாய் கொண்டவர்கள், அரசு வீடு திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் அவர்.
மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை
ஜெனீவாவைப் பொருத்தவரை, மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை மிகவும் அதிகமாகும்.
சூரிச்சும் அதேபோல்தான் என்று கூறும் Dreier, அதற்குக் காரணம், சுவிட்சர்லாந்தின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அந்தந்த பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது என்கிறார். நகர மருத்துவ உள்கட்டமைப்புகள் விசாலமானவையாக உள்ளதால், அங்கு மருத்துவச் செலவும் அதிகமாக உள்ளது. அதாவது பெரிய அறுவை சிகிச்சைகள் போன்ற வசதிகள் அங்கு இருப்பதால், அவை அதிக செலவு பிடிக்கக்கூடியவை என்பதால், அதற்கான காப்பீட்டு பிரீமியம் தொகையும் அதிகமாகவே உள்ளது எனலாம்.
அதிக சாலை வரி மற்றும் வாகன காப்பீட்டுத் தொகை
பொதுவாகவே, கார் வைத்திருப்பது சூரிச்சிலும் சரி, ஜெனீவாவிலும் சரி, அதிக செலவு பிடிக்கும் ஒரு விடயமாகும்.
ஆனால், இவ்விரண்டு நகரங்களிலும் காருக்கான செலவு அதிகமானாலும், மளிகை, பொதுப்போக்குவரத்து, பெட்ரோல், குழந்தைகளுக்கான செலவு, கல்வி முதலான விடயங்கள் மற்ற சுவிஸ் நகரங்களைப்போலத்தான் இங்கும், சொல்லப்போனால், சில விடயங்களுக்கான செலவு குறைவு என்கிறார் Dreier.