சுவிட்சர்லாந்தில் உருளைக்கிழங்கு சிப்ஸுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை... ஒரு சுவாரஸ்ய தகவல்
இந்த கொரோனா வந்தாலும் வந்தது, எதிர்பாராத இடத்திலெல்லாம் சிக்கலை உருவாக்கியுள்ளது அது...
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அலுவலகங்களுக்கும் செல்ல முடியாமல், உணவகங்களுக்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கிய மக்கள், வேறு வழியில்லாமல் உருளைக்கிழக்கு சிப்ஸ் பாக்கெட்களாக வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள். தேவை அதிகரித்த அதே நேரத்தில் கோடைக்கால பருவநிலை உருளைக்கிழங்கு உற்பத்திக்கு சாதகமாக இல்லாததால், போதுமான அளவு உருளைக்கிழங்கு விளைச்சல் கிடைக்கவில்லை.
சிப்ஸ் தயாரிப்பாளர்களிடம் போதுமான உருளைக்கிழங்குகள் இல்லை. ஆகவே, அவர்கள் சுமார் 20,000 டன் உருளைக்கிழங்குகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்வதும் எளிதல்ல, பெடரல் வேளாண்மை அலுவலகத்திடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்றால்தான் இறக்குமதி செய்ய முடியும்.
இதனால் சிப்ஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறியுள்ள சிப்ஸ் நிறுவனங்கள், எந்த அளவுக்கு சிப்ஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை இப்போதைக்கு கணக்கிட முடியாது என்கின்றன.
என்றாலும், இந்த ஆண்டு சிப்ஸ் விரும்பிகளுக்கு அதிக ஏமாற்றம் இருக்காது என தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதே நேரத்தில் வருங்காலத்தில் பருவ நிலை மாற்றத்தால் உருளைக்கிழங்கு உற்பத்திக்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதற்கு இதை ஒரு அறிகுறியாக கருதலாம் என்கிறார்கள்.