10,000 அகதிகள்... ஆப்கானிஸ்தான் தொடர்பில் சுவிட்சர்லாந்துக்கு அழுத்தம்
தாலிபான் தீவிரவாதிகள் தற்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில், அகதிகள் தொடர்பில் சுவிஸ் நிர்வாகம் உரிய முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நீண்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபான்கள் கைவசம் சென்றுள்ளது. இது சர்வதேச சமூகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
2001ல் பொறுப்பற்ற முறையில் அமெரிக்க படையெடுப்பு நடந்தது போன்றே தற்போது பொறுப்பற்ற முறையில் அமெரிக்காவும் சர்வதேச துருப்புக்களும் திரும்பப் பெறப்பட்டதாக SP தேசிய கவுன்சிலர் ஃபேபியன் மோலினா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்வதேச சட்டத்தின்படி, தற்போதைய சூழலில் தாலிபான்களின் ஆட்சியே முறையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பேரழிவு என தெரிவித்துள்ள அவர்,
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இப்போது சுவிட்சர்லாந்து உட்பட சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை. இதனால், 10,000 அகதிகளை நாம் ஏற்க வேண்டும் என்பதுடன், சுவிட்சர்லாந்தில் தற்போது புலம்பெயர்ந்துள்ளவர்களின் குடும்பத்தாரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பவங்களை முடிந்தவரை விரைவாக நிறுத்தப்படுவதை உறுதி செய்ய சுவிட்சர்லாந்து எல்லாவற்றையும் செய்ய வேண்டும் எனவும் ஃபேபியன் மோலினா கோரிக்கை வைத்துள்ளார்.