சுவிற்சர்லாந்தில் “நடந்து வந்த பாதையிலே”சுயசரிதம் நூலின் அறிமுகவிழா
திரு.கந்தையா சிங்கம் அவர்கள் எழுதிய “நடந்து வந்த பாதையிலே”சுயசரிதம் நூலின் அறிமுகவிழா 05.03.2022 அன்று லுசேர்ன் மாநிலத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
திரு.புஸ்பராசா அசோக் லூயிஸ் தலைமையுரையாற்ற, திரு.மகேந்திரராஜா கிருஸ்னர் வரவேற்புரையாற்ற, திருமதி.நிர்மலா பரராசசேகரன் வாழ்த்துரை வழங்க, திருமதி.ஆதிலட்சுமி சிவகுமார் நூலாய்வுரையாற்ற, திரு.அன்ரன் பொன்ராஜா மதிப்புரை நிகழ்த்த, கலாநிதி நாகேஸ்வரன் அருள்ராசா (கல்லாறு சதீஷ்) அறிமுகவுரையாற்ற, சிவருசி.தர்மலிங்கம் சசிகுமார் சிறப்புரையாற்ற ,திரு.கந்தையா சிங்கம் ஏற்புரை வழங்க, திருமதி.ரதி கமலநாதன் நன்றியுரையாற்ற, சிற்றுண்டி வேளையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
முதல் பிரதியினை திரு.கல்லாறு சதீஷ் வெளியிட்டு வைக்க திரு.சிவாஜி பெற்றுக்கொண்டார்.
விழாவில் திரு.சண்முகநாதன், திரு.நா.யோகராஜா (தலைவர் - லுசேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம்), திருமதி.தர்மபாலன் ராகினி (லுசேர்ன் தமிழ் மன்றத் தலைவரின் சார்பிலும்) திரு.குமாரசாமி உட்பட பலரும் கலந்து நூலினைப் பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து திரு.கல்லாறு சதீஷ் அவர்கள் பேசுகையில்,
கந்தையா சிங்கம் அவர்கள் எழுதி வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வெளியீடாக வந்துள்ள நூலானது “கடந்து வந்த பாதையிலே” என்னால் ஒரு தனி மனிதனின் சுயசரிதமாகப் பார்க்கப்படவில்லை, மாறாக. ஒரு இனத்தின், ஒரு புலம்பெயர் சமூகத்தின் பாடமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நூல் வெளிவராமல் போயிருந்தால்,பல கடந்த காலங்கள் ஆதாரமற்றுப்போயிருக்கும், ஆனால் நூலின் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது.
நூலாசிரியர் கந்தையா சிங்கம் ஒரு சாதாரண மனிதன் அல்ல, சாதனையாளர். அவர் இந்தத் தமிழச் சமூகத்துக்காக ஆற்றிய அரிய சேவைகளை நூலில் வாசிக்கும் போது வியப்புத் தோன்றுகிறது.
இவர் “ லுசேர்ன் தமிழ் மன்ற விளையாட்டுக் கழகம். சுவிஸ் தமிழர் சதுரங்க சம்மேளனம். உலகத் தமிழர் சதுரங்க சம்மேளனம். உலகத் தமிழர் பூம்பந்துச் சம்மேளனம். உலகத் தமிழர் புகைப்படச் சம்மேளனம் என்று பல அமைப்புகளை நிறுவி கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, டென்மார்க், சுவிற்சர்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் இயங்க வைத்துள்ளார்.
இதன் மூலம் எமது சமூகத்தின் மூளை மேம்பாட்டை, உடல் மேம்பாட்டை, மனமேம்பாட்டை அதிகரிக்கும் முக்கோண நலவாழ்வுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
இதனால் ஒரு சமூக ஊக்கியான இவரைக் கொண்டாட வேண்டியது எமது கடமையாகிறது. நூலை வாசிக்கையில், வாசகனை உடனே சதுரங்கம் பயிலவும், பூம்பந்து விளையாடவும், புகைப்படம் எடுக்கவும் தூண்டும் படைப்பு இது என்பேன்.
சுமார் ஐம்பது நூல்களுக்குமேல் எழுதிய கலாநிதி தமிழ்மணி அகளங்கனின் சகோதரரான இவரின் எழுத்துக்களும் ஒரு கைதேர்ந்த எழுத்தாளரின் படைப்பினைப்போல் இருப்பதனால், இவரிடமிருந்து மேலும் பல நூல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.
மிகச் சிறந்த சமூக நேசனாகவும்,சமூகத் தலைவனாகவும் செயற்படும் திரு. கந்தையா சிங்கம் அவர்களின் “நடந்து வந்த பாதையிலே “நூலை நேற்றைய தினம் மண்டபம் நிறைந்த மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்ததில் மிகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.