உடனடியாக நாடு திரும்புங்கள்... தூதரக அலுவலர்களின் உறவினர்களுக்கு சுவிட்சர்லாந்து உத்தரவு
ரஷ்யா எந்நேரத்திலும் ஊடுருவலாம் என்ற பதற்றம் உக்ரைனில் நிலவி வரும் நிலையில், சுவிஸ் தூதரக அலுவலர்களின் உறவினர்களை உடனடியாக அந்நாட்டிலிருந்து வெளியேறுமாறு சுவிட்சர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று சுவிட்சர்லாந்து வெளியிட்ட பயண ஆலோசனையில், உக்ரைனுக்கு சுற்றுலா மற்றும் அவசரமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அந்நாடு தன் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி முதலான நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு பரிந்துரைத்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து மட்டும் தன் குடிமக்களுக்கு அத்தகைய பரிந்துரையைச் செய்வதை நிறுத்திவிட்டது. உக்ரைனில் இருப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை சுவிஸ் மக்கள் தாங்களே முடிவு செய்துகொள்ளவேண்டியதுதான்.
ஆனால், உக்ரைனிலிருக்கும் சுவிஸ் நாட்டவர்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியாக, Kievஇலிருக்கும் சுவிஸ் தூதரகம் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அத்தியாவசியமற்ற பணியாளர்கள் என கருதப்படும் பல சுவிஸ் தூதரக அலுவலர்கள், நாடு திரும்புவது என முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.