இலங்கையர்களுக்கு உதவும் திட்டம் ஒன்றிற்காக ஆண்டொன்றிற்கு 250,000 டொலர்கள் வழங்கும் சுவிட்சர்லாந்து
இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக சுவிட்சர்லாந்துக்கு தத்துக்கொடுக்கப்பட்டவர்கள், தங்கள் சொந்தக் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு திட்டத்துக்காக, ஆண்டொன்றிற்கு 250,000 சுவிஸ் ஃப்ராங்குகள் (250,000 டொலர்கள்) நிதியுதவி வழங்க சுவிஸ் அரசு முன்வந்துள்ளது.
இலங்கையிலிருந்து சுவிஸ் குடும்பங்களால் சட்ட விரோதமாக தத்தெடுக்கப்பட்ட இலங்கையர்கள், தங்கள் சொந்தப் பெற்றோரையும் குடும்பத்தினரையும் கண்டுபிடிக்கும் பணியில் ‘Back to the Roots’ என்ற அமைப்பு உதவி வருகிறது.
தற்போது, அந்த அமைப்பு துவங்கியுள்ள, இலங்கையர்கள் தங்கள் குடும்பத்தினரைக் கண்டு பிடிக்கும் மூன்று ஆண்டுத் திட்டம் ஒன்றிற்கு நிதியுதவி செய்ய இருப்பதாக சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
1970களிலிருந்து 1990கள் வரை, சுமார் 900 இலங்கைக் குழந்தைகள் சட்ட விரோதமாக சுவிஸ் பெற்றோருக்கு விற்கப்பட்டார்கள்.
அதற்காக சுவிஸ் பெற்றோர், ஒரு குழந்தைக்கு 5,000 முதல் 15,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை கொடுத்துள்ளார்கள். அதிலும் கொடுமை என்னவென்றால், தத்துக் கொடுத்த, அதாவது, குழந்தையைப் பெற்ற தாய்க்கு அந்தப் பணத்தில் சொற்பத் தொகையே கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை இடைத்தரகர்கள் பகல் கொள்ளையடித்திருக்கிறார்கள்.
2020ஆம் ஆண்டுதான், முதன்முறையாக, சுவிஸ் அரசு இப்படி சட்ட விரோதமாக இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு குழந்தைகள் தத்துக்கொடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டதுடன், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.
அந்த சட்ட விரோத தத்தெடுத்தல் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் காட்டிய மெத்தனம், இன்று வரை சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளது சுவிஸ் அரசு.
இதுபோல் வலுக்கட்டாயமாக காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, கடந்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டது தொடர்பில் பாரபட்சமின்றி விசாரணை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.