இ-சிகரெட்டுகளுக்கு வரி விதிக்க சுவிட்சர்லாந்து திட்டம்
Switzerland Plans New Vape Tax to Curb Use: சுவிட்சர்லாந்தில் பயன்பாடு அதிகரித்து வரும் இ-சிகரெட்டுகள் (Vapes) மீதும் கூடுதல் கட்டணம் விதிக்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு முன்வைத்துள்ளது.
புகைப்பிடித்தலைக் குறைக்கும் மற்றும் நிகோட்டின் அடிமைத்தனத்தைத் தடுக்கும் முயற்சிகளுக்கு தேவையான நிதியை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தற்போது சுவிட்சர்லாந்தில் சிகரெட் விற்பனையில் இருந்து வசூலிக்கப்படும் ஒரு சிறப்பு கட்டணம், நாட்டின் புகையிலை தடுப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதியின் மூலம் ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவிடப்படுகின்றன.
ஆனால் சமீப ஆண்டுகளில் பாரம்பரிய சிகரெட்டுகளை விட இ-சிகரெட்டுகள் மற்றும் புதிய நிகோட்டின் தயாரிப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், இந்த நிதியின் வருவாய் குறைந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால், இ-சிகரெட்டுகளும் தடுப்பு நிதிக்குப் பங்களிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
இ-சிகரெட்டுகளும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், குறிப்பாக இளைஞர்களை இலக்காகக் கொண்டு சந்தைப்படுத்தப்படுவதாகவும் அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு அரசியல் கட்சிகள் மத்தியில் பரவலான ஆதரவு கிடைத்துள்ளது. நிகோட்டின் உள்ள அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்த கட்டணம் பொருந்த வேண்டும் என்று சில அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், புகைப்பிடித்த பழக்கத்தை விடுவதற்காக இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவோரை தேவையற்ற வகையில் தண்டிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். போதைப்பொருள் மற்றும் பழக்கவழக்க தடுப்பு அமைப்பான “Addiction Switzerland” இந்த திட்டத்தை வரவேற்றுள்ளது.
குறிப்பாக இளைஞர்களிடையே வேப் பயன்பாடு அதிகரித்து வருவதால், விலையை உயர்த்துவது புதிய பயனாளர்களை தடுப்பதற்கான சிறந்த வழி என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த புதிய கட்டண திட்டம், புகையிலை வரிச் சட்டத்தின் அடுத்த திருத்தத்தின் போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இருப்பினும், அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து சுவிட்சர்லாந்து அரசு இன்னும் இறுதி திகதி எதையும் அறிவிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |