வேலை வாய்ப்பு அளிப்பதில் புதிய உச்சம் தொட்ட சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து 2021ஆம் ஆண்டில் வரலாறு காணாத எண்ணிக்கையிலானவர்களுக்கு வேலை வாய்ப்பளித்துள்ளதாக சுவிஸ் பெடரல் புள்ளி விவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் சுவிஸ் பெடரல் புள்ளி விவரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள், 2021ஆம் ஆண்டின் இறுதியில் சுவிட்சர்லாந்தில் வேலை செய்துகொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில், 5.239 மில்லியனாக உயர்ந்துள்ளதைக் காட்டுகின்றன.
2020ஆம் ஆண்டின் இறுதியை ஒப்பிடும்போது, 2021இல் வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை 1.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஹொட்டல் துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்பு
உணவகத் துறையில் வேலை செய்வோரின் எண்ணிக்கை 8,700 உயர்ந்துள்ளதுடன், வர்த்தக துறை, தயாரிப்பு துறை மற்றும் கட்டுமானத்துறையிலும் வேலை கிடைக்கப் பெற்றுள்ளோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
அனைத்து மாகாணங்களிலும் வளர்ச்சி
சுவிட்சர்லாந்திலுள்ள அனைத்து மாகாணங்களிலும் வேலை கிடைக்கப்பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜெனீவா ஏரி பகுதியில் 2.6 சதவிகிதமும், சூரிச்சில் 2.9 சதவிகிதமும், மத்திய சுவிட்சர்லாந்தில் 3.1 சதவிகிதமும் கூடுதலாக வேலை கிடைக்கப் பெற்றுள்ளோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அதிகரித்த வேலை வாய்ப்பு
2021 இறுதிவாக்கில், 32,900 வேலையிடங்கள் காலியாக இருந்தன. 2020ஐ ஒப்பிடும்போது இது 50 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.