சுவிட்சர்லாந்தில் கொரோனா பலி எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது: ஆனால்...
நேற்று முன்தின நிலவரப்படி, சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளது. 8.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட சுவிட்சர்லாந்தில், இதுவரை 664,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதோடு, 10,012 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், அரசின் கொரோனா நிபுணர் குழு, தற்போது சுவிட்சர்லாந்தில் கொரோனா நிலைமை சீராக இருப்பதாகவும், சொல்லப்போனால் சற்று முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றில் பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் மாறி மாறி பார்த்த சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி திட்டம் செவ்வனே நிறைவேறி வருவது முதலான காரணங்களால் வைரஸின் இனப்பெருக்க வீதம் சமீபத்தைய நாட்களாக ஒன்றைவிட குறைந்துள்ளது.
தற்போது அது 0.93 ஆக உள்ளது. மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளின் படுக்கைகளில் நான்கில் ஒரு பங்கில் மட்டுமே கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆக, கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டினாலும், மொத்தமாகப்
பார்த்தால், நாட்டில் கொரோனா நிலைமை சீரடைந்து வருவதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளது நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.