உக்ரைன் குழந்தைகளுக்காக தயாராகும் சுவிஸ் பள்ளிகள்!
ரஷ்ய படையெடுப்பைபின் காரணமாக உக்ரைனில் இருந்து தப்பி சுவிட்சர்லாந்து வரும் குழந்தைகள் பள்ளியில் படிப்பதற்கான ஏற்பாடுகளை சுவிஸ் அரசு செய்துவருகிறது.
சுவிட்சர்லாந்து 5,000 அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க தயாராகி வரும் நிலையில், போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து வெளியேறும் குழந்தைகள் விரைவில் நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகளில் சேர்ந்து தங்கள் படிப்பை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதே இதன் நோக்கம் என சுவிஸ் தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகளுக்கு சிறப்பு ஜேர்மன் வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், திங்களன்று Eschlikon, canon Thurgau-ல் உள்ள ஒரு பள்ளியில் 3 உக்ரைனிய குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமஸ் மைண்டர் கூறினார்.
இது குறித்து மைண்டர் பேசுகையில், சுவிஸில் பல மாணவர்கள் உக்ரைனின் நிலைமைக்கு மிகவும் இரக்கத்துடன் பதிலளித்துள்ளனர் என்றும் நன்கொடைகளை சேகரித்து உதவ விரும்புகிறார்கள் என்றும் கூறினார். "உக்ரைனில் இருந்து எங்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எங்கள் வகுப்புகளில் நல்ல வரவேற்பைப் பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் அகதிகளை மீட்கும் நடவடிக்கைகளை சுவிட்சர்லாந்து முடுக்கிவிட்டுள்ளது. திங்களன்று, அரசாங்கம் போரிலிருந்து வெளியேறும் மக்களுக்காக சுவிஸ் கூட்டாட்சி புகலிட மையங்களில் 5,000 இடங்களை ஒதுக்கியுள்ளதாகக் கூறியது.
தற்போது சுவிட்சர்லாந்தில் உக்ரைனில் இருந்து 1,314 அகதிகள் உள்ளனர்; இவர்களில் 315 பேர் உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் தனிப்பட்ட முறையில் தங்கியுள்ளனர், மீதமுள்ளவர்கள் கூட்டாட்சி புகலிட மையங்களில் தங்க வைக்கப்பட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வருவதாக இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.