சுவிட்சர்லாந்தில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மோசமான எண்ணம்!
சுவிட்சர்லாந்தில் இளைஞர்களிடையே தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வருவதாக ஆதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை ஆதரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அறக்கட்டளையான Pro Juventute இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 700 குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடமிருந்து இந்த அறக்கட்டளைக்கு அழைப்பு வருகிறது. இது கோவிட்-19 தொற்று பரவ தொடங்கிய முதல் ஆண்டை விட மிக அதிகம் என்று கூறுகிறது.
இந்த அழைப்புகளில் சுமார் 1% (ஒரு நாளைக்கு 7 பேர்) இளைஞர்கள் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் என்றும் மற்றவர்கள் ஏதோவொரு வடிவத்தில் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள் என்று Pro Juventute கூறுகிறது.
மொத்தத்தில் தொற்றுநோய்களின் போது தற்கொலை எண்ணங்கள் கொண்ட இளைஞர்களிடமிருந்து 40% அதிகமான அழைப்புகளைப் பெற்றுள்ளதாக Pro Juventute தெரிவித்துள்ளது.
அதேபோல், தொடர்பு கொண்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தாங்கள் ஓன்லைனில் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததாகக் கூறுகிறார்கள்.
Photo: Keystone / Christof Schuerpf
மேலும், இளைஞர்களின் அழைப்புகளில் மற்றொரு முக்கியமான பிரச்சினை என்றால் (23%) அது எதிர்காலத்தைப் (career choices) பற்றியது என்றும், அதில் "அதிகப்படியான எதிர்பார்ப்புகள் மற்றும் மன அழுத்தம்" இருப்பதாக பல இளைஞர்கள் புகார் கூறுகின்றனர்.
“இப்போது காணக்கூடிய பிரச்சினைகள் கொரோனா தொற்றுநோயின் நேரடி விளைவு மட்டுமல்ல. பல எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தபோதிலும், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியத்தில் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டதன் விளைவாகும்” என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
"எதிர்கால சந்ததியினரின் பிரச்சினைகளை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கும், அவற்றைக் கையாள்வதில் அதிக நேரத்தையும் வளங்களையும் முதலீடு செய்வதற்கும் இதுவே சரியான நேரம்" என்று Pro Juventute கூறுகிறது.
அறக்கட்டளையின் 147.ch ஆலோசனை சேவையை ஆதரிக்க அதிக நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 300,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மற்றும் கிட்டத்தட்ட 140,000 பெற்றோர்கள் ஒவ்வொரு ஆண்டும் Pro Juventute-ன் சேவைகளால் பயனடைகின்றனர்.