சுவிஸில் அமுலுக்கு வருகிறது கொரோனா சான்றிதழ்
சுவிட்சர்லாந்தில் ஜூன் 7ம் திகதி முதல் கொரோனா சான்றிதழ் அமுலுக்கு வருவதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு மாநிலமும் இந்த சான்றிதழ்களை வெளியிடுகின்றன. இது நகல் எடுத்து பயன்படுத்தும் வகையிலும், மொபைல் செயலியில் பாதுகாக்கும் வகையிலும் செயல்படுத்த உள்ளனர்.
சுவிஸ் முழுக்க ஜூன் மாத இறுதிக்குள் அமுலுக்கு வரும் எனவும், முதலில் பெர்ன் மாநிலத்தில் இந்த கொரோனா சான்றிதழ் அமுல் படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலவசமாக அளிக்கப்படும் இந்த சான்றிதழுக்காக மக்கள் அவர்களின் மருத்துவர்கள் அல்லது மருந்தகங்கள் அல்லது தடுப்பூசி பெற்றுக்கொண்ட இடங்கள் ஆகியவற்றை நாடலாம்.
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் அல்லது கொரோனா சோதனை மேற்கொண்டவர்கள் குறித்த சான்றிதழுக்கு தகுதியானவர்கள்.
குறித்த சான்றிதழில் நோயாளியின் பெயர் உள்ளிட்ட தேவையான அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சான்றிதழலானது கட்டாயம் அல்ல என்ற போதும், கொரோனா பேரழிவில் இருந்து மக்கள் மீண்டு வெளியே வர பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு பயணங்களுக்கு குறித்த சான்றிதழ் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா அச்சுறுத்தல் இல்லாத நாடுகளுக்கு செல்ல நேர்ந்தால், இந்த சான்றிதழ், அந்த நாட்டின் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்களிக்கும்.