மே 31 முதல் சில பயணிகளுக்கு மட்டும் சில கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல்
கோடை விடுமுறை நெருங்கி வருவதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்துக்கு வரும் வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாடு சென்றுவிட்டு திரும்பும் சுவிஸ் குடிமக்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் சில நெகிழ்த்தப்பட்டுள்ளன. ஆனால், சர்வதேச பயணம் தொடர்பில் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் இந்த விதிகள், பயணிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளன.
அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டுமின்றி, ஒன்லைன் ஆவணங்களை நிரப்புதல், பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பு கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை சமர்ப்பித்தல் என பல்வேறு பிரச்சினைகள் இதுவரை இருந்துவந்தன.
ஆனால், மே 31 முதல், சில கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட உள்ளன, குறைந்தபட்சம் சில பயணிகளுக்காவது... இந்த கட்டுப்பாடுகள் நெகிழ்த்தலின்படி, கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கும் சரி, தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் சரி, ஆறு மாதங்களுக்காவது நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என கருதப்படுவதால் அவர்களுக்கு இந்த ஆறு மாத சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தனிமைப்படுத்தல் மற்றும் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்ததும் கொரோனா பரிசோதனை செய்தல் ஆகிய கட்டுப்பாடுகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பிரச்சினை உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு இந்த விதிவிலக்குகள் பொருந்தாது.
ஆனாலும், இந்த கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நெகிழ்த்தல் ஆகியவற்றில் 14
நாட்களுக்கொருமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுக்கொண்டே இருப்பதால், பயணம்
புறப்படும் முன் அவற்றை சரி பார்த்து உறுதி செய்துகொள்வது நல்லது.