சுவிட்சர்லாந்தில் வேலை நேரத்தை குறைக்க கோரிக்கை!
சுவிட்சர்லாந்தில் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை போலவே தொழிலார்களுக்கான வேலை நேரத்தை குறைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தொழிற்சங்கம் சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், நாட்டில் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு முழு ஊதிய இழப்பீட்டுடன் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சுவிஸ் தலைநகர் பெர்னில் 66 பிரதிநிதிகள் சந்தித்து பேசியத்தைத் தொடர்ந்து தொழிற்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "சுவிட்சர்லாந்தில் உள்ளதைப் போல ஐரோப்பாவில் எங்கும் மக்கள் கடினமாக உழைக்கவில்லை. தற்போது, ஊழியர்கள் ஒரு முழுநேர வேலையில் வாரத்திற்கு சராசரியாக 41.7 மணிநேரம் வேலை செய்கிறார்கள்” என்று குறிப்பிட்டது.
வேலை நேரங்களின் எண்ணிக்கை நிலையானதாக இருந்தாலும், வேலையின் தீவிரம் மற்றும் வேகம் அதிகரித்து வருவதாக தொழிற்சங்கம் குறிப்பிட்டது.
"இதன் விளைவாக, மன அழுத்தம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன. ஊழியர்கள் சோர்வடைகிறார்கள், நோய்வாய்ப்படுகிறார்கள் அல்லது தொழிலாளர் சந்தையில் இருந்து விலக்கப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் அந்த அறிக்கையில், ஒரு நபர் ஒரு முழுநேர வேலையில் எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கம் நம்புகிறது என்பதை வரையறுக்கவில்லை.
சராசரியாக, OECD அமைப்பின் பணக்கார நாடுகளில் ஒரு முழுநேர ஊழியர் வாரத்திற்கு 37 மணிநேரம் வேலை செய்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி முழுநேர வேலை நேரம் வாரத்திற்கு 31.1 மணிநேரம் ஆகும்.
சுவிட்சர்லாந்தில் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் திட்டங்களை எதிர்க்கும் தொழிற்சங்கம், தொழிலாளர்கள் "நீண்ட காலம் வேலை செய்வதற்குப் பதிலாக அதிக காலம் வாழ" வேண்டும் என கோரியுள்ளது.
உற்பத்தித்திறன் ஆதாயங்கள் இறுதியாக அவற்றை உருவாக்கிய மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் வாதிடுகிறது.
ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் நியூசிலாந்து உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளும் நிறுவனங்களும் குறுகிய வேலை வாரங்களை சோதனை செய்து வருகின்றன.
குறுகிய வேலை வாரங்கள், உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது. இந்த யோசனை கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது கவனம் பெற்றது.