சுவிட்சர்லாந்தில் மீண்டும் அமுலுக்கு வந்த சட்டம்! பெரும்பாலான மக்கள் ஆதரவு
சுவிட்சர்லாந்தில் மீண்டும் கோவிட்-19 சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டதைப் போல, புதிய கோவிட்-19 சட்டத்தை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க நவம்பர் 28-ஆம் திகதி மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இன்று (திங்கட்கிழமை) இந்த வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் வெளியான நிலையில், பெரும்பான்மையான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதாவது தற்போது நடைமுறையில் உள்ள இந்த சட்டத்திற்கு ஆதரவாக 62 சதவீத வாக்குகளை வழங்கி சுவிஸ் குடிமக்கள் ஆதரவளித்துள்ளனர்.
அதனடிப்படையில், சுவிட்சர்லாந்தில் இயற்றப்பட்ட புதிய கோவிட் -19 சட்டத்தின்படி, தடுப்பூசி போடப்பட்டவர்கள், மீட்கப்பட்டவர்கள் அல்லது பரிசோதனையில் எதிர்மறையானவர்கள் மட்டுமே பொது நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியும்.
Photo: Arnd Wiegmann/Reuters
இந்த வாக்கெடுப்பில், இரண்டு மாநிலங்கள் மட்டுமே இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. அவை, கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Schwyz மற்றும் Appenzell Innerrhoden - இரண்டும் பழமைவாத கிராமப்புற பகுதிகள் என்று கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், Omicron வகை கொரோனா வைரஸால் முதல் நபர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது.
உலகை அச்சுறுத்தும் இந்த கொடிய வைரஸ் நாட்டிற்குள் நுழைந்துவிட்ட நிலையில், இந்த சட்டம் தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது நோய்த்தொற்றை எளிதாக கட்டுப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.