இலங்கையில் கோவில் அன்னதான நிகழ்வில் வாள்வெட்டு தாக்குதல்: பலர் படுகாயம்
இலங்கையில் கோவில் அன்னதான நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூர ஆயுத தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு ஆலயத்தில் பரபரப்பு
ஏறாவூர் மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் கோவிலில் அன்னதான நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்த போது வாள்வெட்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த வன்முறையில், பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இருப்பினும் மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் கோவிலில் வருடாந்திர உற்சவம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்ட போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
முற்றிய வாக்குவாதம்
இந்த நிகழ்வின் போது அன்னதானம் வாங்கி உண்ட இளைஞர் ஒருவர், உணவு சரி இல்லை என தெரிவித்துள்ள நிலையில் அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 7 பேர் கொண்ட கும்பல் அன்னதானம் வழங்கியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மடக்கி பிடிக்கப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |