சிறந்த துணை என கூறிய சைமண்ட்ஸ்.. உடலை நெருங்க விடாமல் தடுத்த நாய்கள்! நெகிழ்ச்சி சம்பவம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரு சைமண்ட்ஸின் உடலை நெருங்க விடாமல் அவர் வளர்த்த செல்லப்பிராணிகள் தடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரு சைமண்ட்ஸ் நேற்று விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது செல்லப்பிராணிகளான நாய்களுடன் காரில் பயணித்துள்ளார். கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானபோது, அதிர்ஷ்டவசமாக அந்த நாய்கள் உயிர் தப்பின. கார் ஒன்று விபத்திற்குள்ளானதை பார்த்த பபிதா நீலிமன் என்ற பெண்ணும், அவரது ஆண் நண்பரும் அருகில் சென்று பார்த்தபோது சைமண்ட்ஸ் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
அவருக்கு உதவ அவர்கள் அருகில் செல்ல முயன்றபோது, சைமண்ட்ஸின் செல்ல நாய்கள் அவர்களை தடுத்துள்ளன. அதிலும் ஒரு நாய் உறுமும் விதத்தில் குறைத்து தனது எஜமானரின் அருகில் செல்ல விடாமல் தடுத்ததாக பபிதா தெரிவித்தார். அதன் பிறகு சைமண்ட்ஸ் உணர்வற்று கிடைப்பதை அறிந்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் மீட்பு படையினர் சைமண்ட்ஸை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சைமண்ட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது புதிய சிறந்த துணை என்று குறிப்பிட்டு அந்த நாயின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அவர் கூறியது போலவே அவரை நெருங்க விடாமல் குறித்த நாய் பாசப் போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.