ஐபிஎல் எங்கள் நட்பில் நஞ்சை கலந்துவிட்டது: வெளிப்படையாக கூறிய அவுஸ்திரேலிய வீரர்
ஐபிஎல் பணம் மைக்கேல் கிளார்க்குடனான நட்பில் நஞ்சை விதைத்திருக்கலாம் என முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான மைக்கேல் கிளார்க் மற்றும் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு மைக்கேல் கிளார்க் வெளியிட்ட ஆஷஸ் டைரி 15 என்ற புத்தகத்தில் 'அணிக்கு பெரிதாக எதுவும் சாதிக்காமல், சைமண்ட்ஸ் குடித்துவிட்டு கும்மாளம் போட்டவர். இப்படி தரம் தாழ்ந்த ஒருவர், மற்றொருவரை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லாதவர்' என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் தி பிரட் லீ பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மைக்கேல் கிளார்க் உடனான நட்பு முறிவு குறித்து ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பேசினார்.
அவர் கூறுகையில், 'ஐபிஎல் 2008 தொடரில் 5.4 கோடி ரூபாய்க்கு டெக்கான் சார்ஜர்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் ஆனேன். ஐபிஎல் தொடங்கியபோது ஐபிஎல்-லில் விளையாடுவதற்கு எனக்கு நிறைய தொகை கிடைத்ததாக மேத்யூ ஹைடன் சுட்டிக்காட்டினார்.
இதனால் மைக்கேல் கிளார்க்குக்கு கொஞ்சம் பொறாமை ஏற்பட்டு இருந்ததை அவர் அடையாளம் காட்டினார். பணம் வேடிக்கையான விடயங்களைச் செய்கிறது. அது எனக்கும், கிளார்க்குக்கும் இடையிலான உறவில் நஞ்சை உண்டாக்கி இருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். இருப்பினும் அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவருடன் நான் இப்போது நட்பில் இல்லை. ஆனால் நான் இங்கே உட்கார்ந்து சேற்றை வீசப் போவதில்லை' என தெரிவித்தார்.