அதிரடி காட்டிய இந்திய அணி! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 210 ஓட்டங்கள் குவிப்பு
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ஓட்டங்கள் குவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய 2-வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்த முறை கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவே களமிறங்கினர்.
தொடக்கம் முதலே ராகுல், ரோஹித் இணை அதிரடி காட்டத் தொடங்கியது. பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது.
இதன்பிறகு, நடு ஓவர்களில் ரன் ரேட் உயராமல் சீராக சென்றுகொண்டிருந்தது. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 85 ஓட்டங்கள் எடுத்தது.
ரோஹித் சர்மா 37-வது பந்திலும், ராகுல் 35-வது பந்திலும் அரைசதத்தை எட்டினர். பின்னர் அதிரடிக்கு மாற, ரஷித் கான் ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்தன. இதனால், ரன் ரேட் மீண்டும் ஓவருக்கு 9.5-ஐ தாண்டியது.
முதல் விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா 74 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ராகுல் 69 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
21 பந்துகளே மீதமிருந்த நிலையில் முன்கூட்டியே களமிறக்கப்பட்ட ரிஷப் பண்ட மற்றும் ஹார்திக் பாண்டியா களத்தில் இருந்தனர்.
இருவரும் போட்டிபோட்டு சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டனர். இதனால், இந்திய அணிக்கு 17-வது ஓவரில் 15 ஓட்டங்கள், 18-வது ஓவரில் 15 ஓட்டங்கள், 19-வது ஓவரில் 19 ஓட்டங்கள் மற்றும் கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் கிடைத்தன.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பண்ட13 பந்துகளில் 27 ஓட்டங்களும், பாண்டியா 13 பந்துகளில் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி காலத்தில் இறங்கியுள்ளது. இந்திய அணியிடையே பந்துவீச்சில் அபார மாற்றம் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.