டி20 உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து! பாகிஸ்தானை வீழ்த்தி சரித்திர வெற்றி: ரசிகர்கள் கொண்டாட்டம்
2022ம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி சரித்திர வெற்றி படைத்துள்ளது.
நாணய சுழற்சி
பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து, பாகிஸ்தான் அணியை முதல் பேட்டிங்கில் களமிறங்குமாறு அழைத்தது.
முதல் இன்னிங்ஸ்
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்று பாபர் அசாம் களமிறங்கினர்.
ஆனால் முகமது ரிஸ்வான் மற்றும் முகமது ஹரீஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மிகவும் சிரமப்பட்டது.
கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஷான் மசூத் ஆகிய இருவரும் போராடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர், இருப்பினும் கேப்டன் பாபர் அசாம் 28 பந்துகளில் 32 ஓட்டங்கள் குவித்து இருந்த போது ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து ஷான் மசூத் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்து 38 ஓட்டங்கள் குவித்து இருந்த போது சாம் கர்ரன் பந்தில் லிவிங்ஸ்டோனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்கள் குவித்து உள்ளது.
அசத்திய சாம் குர்ரன்
போட்டியின் ஆரம்பம் முதலே அதிகம் செலுத்தி வந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை ஓட்டங்கள் குவிக்க விடாமல் திணறடித்தனர். அதிலும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் குர்ரன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
நான்கு ஓவர்கள் பந்து வீசிய சாம் குர்ரன் 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து வெற்றிக்கு 138 ஓட்டங்கள் இலக்கு 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழந்து 137 ஓட்டங்கள் குவித்து உள்ளது.
மிரட்டிய பாகிஸ்தான் வேகப்பந்து:
138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் திக்குமுக்காட செய்தனர்.
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் உப்பு, ஹாரி புரூக் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தனர்.
விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் கேப்டன் ஜோஸ் பட்லர் ஒருப்பக்கம் அதிரடியாக விளையாடி வந்தார், அவரும் 26 ஓட்டங்கள் குவித்து இருந்த போது ஹாரிஸ் ரவுஃப் பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
வெற்றிக்கு உழைத்த பென் ஸ்டோக்ஸ்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற பென் ஸ்டோக்ஸ் மட்டும் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
49 பந்துகளை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 52 ஓட்டங்கள் குவித்து, இங்கிலாந்து அணியின் உலக கோப்பை கனவை நிறைவேற்றினார்.
கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
கடுமையான போராட்டத்திற்கு பிறகு, பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 138 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி, 19வது ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன்மூலம் டி20 உலக கோப்பை கைப்பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் அணி சரித்திர வெற்றி படைத்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் மற்றும் ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன் கைப்பற்றியுள்ளார்.