சில்லு சில்லா சிதறிய நமீபியா., பிரித்தெடுத்த அஸ்வின், ஜடேஜா: இந்தியாவுக்கு 133 ஓட்டங்கள் இலக்கு
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய நமீபியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-12 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, களமிரங்கிய நமீபியா தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 33 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் மைக்கெல் வான் லிங்கென் 14 ஓட்டங்களுக்கு ஜாஸ்பிரித் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் சூழல் கூட்டணி நமீபியா நடுவரிசை பேட்ஸ்மேன்களை வரிசையாக வெளியேற்றியது.
அஸ்வின் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், நமீபியா அணியின் எண்ணிக்கை உயர வாய்ப்பே இல்லாமல் போனது.
இருப்பினும், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 ஓட்டங்கள் எடுத்த டேவிட் வீஸ் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.
முகமது ஷமி கடைசி ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி கொடுக்க, இறுதியில் நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில், 133 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
