டி20 உலகக்கிண்ணம்... மூன்றாவது முறையாக வென்று இந்திய அணி சாதனை
டி20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்று இந்திய அணி சரித்திர சாதனை படைத்துள்ளது.
சஞ்சு சாம்சன்
சொந்த மண்ணில் உலகக் கிண்ணத்தை வென்ற முதல் அணி, தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கிண்ணத்தை வென்ற ஒரே அணி என்ற பெருமையும் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டி நியூசிலாந்து பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர்.
நியூசிலாந்து பந்துவீச்சை சிக்சர், பவுண்டரி என அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் பறக்க விட்டனர். அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை கடந்து அசத்தினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் பொறுப்பும் அதிரடியும் கலந்து ஓட்டங்களை குவித்தார்.
இந்த கட்டத்தில் நியூசிலாந்து அணி பந்துகளை மெதுவாக வீச அதனை நல்வாய்ப்பாக பயன்படுத்திய இந்திய அணி வீரர்கள் அடித்து நொறுக்கினர். பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 92 ஓட்டங்கள் சேர்த்தது.
சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 52 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ஓட்டங்கள் சேர்த்தது.
மூன்றாவது வீரராக களம் இறங்கிய இஷான் கிஷனும் தன் பங்கிற்கு பட்டையை கிளப்பினார். அவரும் பவுண்டரி, சிக்சர் என பறக்க விட 25 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ஓட்டங்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

இதில் எட்டு சிக்சர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தனி நபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஆட்டத்தின் 16-வது ஓவரில் சாம்சன், இஷான், சூரியகுமார் யாதவ் என ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இது ஆட்டத்தில் சிறிய சரிவை ஏற்படுத்தியது. அதன் பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா பவுண்டரிகளை அடிக்க முடியாமல் தடுமாறினார்.
இதனால் இறுதிக்கட்டத்தில் 16 பந்துகளுக்கு பவுண்டரிகளையே அடிக்காமல் இந்தியா இருந்தது. ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரின் சிவம் துபே இரண்டு சிக்ஸர், 3 பவுண்டரி என 24 ஓட்டங்கள் குவித்தார்.

இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்கள் குவித்தது. இது டி20 உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
பும்ரா 4 விக்கெட்டுகள்
இதனையடுத்து 256 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அரை இறுதியில் 33 பந்துகளில் சதம் விளாசிய, ஃபின் ஆலன் விக்கெட்டை அக்சர் பட்டேல் ஒன்பது ஓட்டங்களில் வீழ்த்த நியூசிலாந்து அணியின் சரிவு தொடங்கியது.
ரச்சின் ரவீந்திரா (1) பும்ரா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து அணியின் அதிரடி நாயகனான கிளன் பிலிப்ஸ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரனான டிம் ஃசெபர்ட் மட்டும் அதிரடி காட்டினார்.

இதனால் நியூசிலாந்து அணி பவர் பிளே முடிவில் 52 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் 3 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டிம் செபர்ட் 26 பந்துகளில் 52 ஓட்டங்கள் சேர்த்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் வெளியேறினார்.
இதனால் நியூசிலாந்து அணி 72 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்றது. ஆறாவது விக்கெட்டுக்கு டாரல் மிட்செல் மற்றும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ஜோடி சேர்ந்து கௌரவமான தோல்வியை தழுவ வேண்டும் என்று நோக்கில் அதிரடி காட்ட முயன்றனர்.
இருப்பினும் மிட்செல் 11 பந்துகளை எதிர் கொண்டு 17 ஓட்டங்களில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியின் தோல்வி உறுதியான நிலையில் கீழ் வரிசை வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.

இதனால் நியூசிலாந்து அணி 159 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்றாவது முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.
இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 ஓவர்களில் 15 ஓட்டங்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |