டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு! முக்கிய வீரர்களுக்கு ஆப்பு? கசிந்த தகவல்
டி20 உலகக் கோப்பை குறித்து இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி, கங்குலி இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்டை பார்க்கச் சென்ற குங்குலி, ஜெய் ஷா உட்பட பிசிசிஐ நிர்வாகிகள் குழு, கோலியிடம் டி20 உலகக் கோப்பை குறித்து நேற்று இரவு ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆலோசனையின்போது, ஐபிஎல் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகளில் வீரர்களின் பார்மும், அவர்கள் அமீரகத்தில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதும் தெரிந்துவிடும்.
அதன்பின்னர், வீரர்களை இறுதி செய்வோம் என பிசிசிஐ நிர்வாகிகள் கோலியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சீனியர், ஜூனியர் வித்தியாசம் இல்லாமல் பார்மை மட்டும் கவனத்தில் கொண்டு, அணியை தேர்வு செய்ய வேண்டும் எனவும் சில பிசிசிஐ நிர்வாகிகள் கறாராகத் தெரிவித்து விட்டார்களாம்.
இதனால், ஷிகர் தவன், அஜிங்கிய ரஹானே, ஹார்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஐபிஎல் தொடரில் தங்களை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனக் கருதப்படுகிறது.
மேலும், இளம் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார், இஷான் கிஷன், பிரித்வி ஷா போன்றவர்கள் நல்ல பார்மில் இருப்பதால், அணியைத் தேர்வு செய்வதில் பிசிசிஐக்கு பெரும் சிக்கல் இருக்கும் என கூறப்படுகிறது.