டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இந்த வீரர்கள் இடம்பெறுவது உறுதி! தமிழக வீரர்கள் நடராஜன், அஸ்வினின் நிலை இதுதான்
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்படவுள்ள சூழலில் அணியில் 10 வீரர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர், அதே சமயம் தமிழக வீரர்கள் நடராஜன், அஸ்வின், வருண்சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்படுவார்களா என தெரியாத நிலையே தற்போது வரை உள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் 10 வீரர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 இடத்திற்கு 16 வீரர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கிரிக் இன்ஃபோ செய்திகளின்படி, விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் சாஹல் இந்திய அணியில் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர மற்ற 5 வீரர்கள் மற்றும் 3 ரிசர்வ் வீரர்கள் யார் என்பதில் தான் தற்போது மோதல் உள்ளது.
ஷிகார் தவான், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் பர்திவ் ஷா ஆகியோர் இந்த பந்தயத்தில் உள்ளனர். இது தவிர 2 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்படும். இவர்களில் ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், டி நடராஜன், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் லிஸ்டில் உள்ளனர்.
ஆல்-ரவுண்டருக்கான ரேஸிலும் போட்டி அதிகமாகவே உள்ளது. அக்ஷர் படேல், க்ருணால் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். மறுபுறம் ரவிசந்திரன் அஸ்வின், ராகுல் சஹார் மற்றும் வருண் சக்கரவர்த்தி என சுழற்பந்தில் சிறப்பாக செயல்படுபவர்களும் உள்ளனர்.