நமீபியா வீரர்களை நடுநடுங்கவைத்த ஆசம், ரிஸ்வான்! 189 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான்!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் நமீபியா வெற்றி பெற 190 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அபுதாபியில் இன்று நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய பாபர் ஆசம் 49 பந்துகளில் 7 பவுண்டரிகளை விளாசி 70 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதேபோல், அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான் 50 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 79 ஓட்டங்களை எடுத்தார்.
ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த முகமது ஹபீஸ், 16 பந்துகளில் 5 பவுண்டரிகளை விளாசி 32 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ஓட்டங்களை குவித்தது.
நமீபியா தரப்பில் அந்த அணியின் ப்ரைலிங்க் மற்றும் டேவிட் வெய்ஸ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நமீபியா விளையாடி வருகிறது.