டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? வாய்பிளக்கும் ரசிகர்கள்
டி20 உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்து தெரியவந்துள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்த சூழலில் சூப்பர் 12 போட்டிகள் தொடங்கிவிட்டன.
டி20 உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரையில் 16 அணிகள் பங்கேற்றிருக்கும். சர்வதேச டி20 தரவரிசைப்பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். மீதமுள்ள 4 இடங்களுக்காக 8 அணிகள் மோதிக்கொள்ளும்.
இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெறும். இதன் பின்னர் தலா 6 அணிகள் வீதம் 2 குழுக்கள் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி இறுதிப்போட்டி நடைபெறும்.
டி20 உலகக்கோப்பை தொடருக்காக மொத்தம் ரூ. 420 கோடியே 7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடரில் பங்குபெறும் 16 அணிகளுக்குமே பிரித்துக்கொடுக்கப்படவுள்ளது. ஆனால் வெற்றி, தோல்விகளை பொறுத்து பணத்தொகை குறையும்.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 12 கோடியே, 2 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதே போல இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்து 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 6 கோடியே 1 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையிறுதி வரை சென்று 2 அணிகள் வெளியேற்றப்படும். அப்படி வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ. 3 கோடியே 52 ஆயிரம் கொடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.