ரோஹித் ஷர்மா, கேஎல். ராகுல் அரைசதம்; வெற்றியுடன் தொடரைவிட்டு வெளியேறிய இந்தியா
டி20 உலகக்கோப்பை தொடரின் கடைசி ஆட்டமாக இன்று நமீபியாவுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் படுதோல்வி கண்ட இந்திய அணியின் அரையிறுதி கனவு தகர்ந்தது.
ஆனால் அதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளிடம் பெற்ற வெற்றி இந்திய அணிக்கு உத்வேகத்தை கொடுத்தது. ரன்ரேட்டிலும் ஏற்றம் கண்டதால் இந்தியாவுக்கான அரைஇறுதி வாய்ப்பு லேசாக எட்டிப்பார்த்தது.
ஆனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு முற்றிலுமாக பறிபோனது.
இந்த நிலையில், இன்று துபாய் சர்வதேச அரங்கில் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நமீபியாவுக்கு எதிராக மோதியது.
இந்தியா ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டாலும், விராட் கோலிக்கு டி20 கேப்டனாக இது கடைசி போட்டி என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நமீபியா அணியில் ஓபனர்கள் பார்ட் 21 (21), மைக்கேல் வான் லிங்கன் 14 (15) ஆகியோர் ஓரளவுக்கு ஓட்டங்களை சேர்த்தார்கள். அடுத்து கிரேயக் வில்லியம்ஸ் 0 (4) டக் அவுட் ஆனார். கேப்டன் எராஸ்மஸும் 12 (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை.
தொடர்ந்து மற்ற பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்தில் நடையைக் கட்டி வந்த நிலையில், அனுபவ வீரர் டேவிட் வீஸ் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி 26 (25) ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் ஜான் ப்ரைலிங் 15 (15), ரூபன் ட்ரம்பில்மேன் 13 (6) ஆகியோர் உதவிக்கரமான ஓட்டங்களை அடித்தார்கள்.
இதனால், நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ஓட்டங்களை சேர்த்தது.
ரவீந்திர ஜடேஜா (3/16), ரவிச்சந்திரன் அஸ்வின் (3/20) ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள். ஜஸ்பரீத் பும்ரா தனது பங்கிற்கு 2/19 விக்கெட்களை வீழ்த்தினார்.
133 என்ற சிறிய இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 56 (37), கே.எல்.ராகுல் 50* (34) ஆகியோர் சிறந்த துவக்கம் தந்தனர்.
அடுத்து ஒன் டவுன் களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 24* (17) தனது பங்கிற்கு ஓட்டங்களை குவித்தார். இதனால், இந்திய அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 133 ஓட்டங்கள் சேர்த்து, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
ரோஹித் ஷர்மா இப்போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்கள் எனும் மைல் கல்லை எட்டினார்.
விராட் கோலி (3227), மார்டின் கப்தீல் (3115) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள்.
தற்போது சூப்பர் 12 சுற்றின் லீக் போட்டிகள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. இந்த நிலையில், வரும் 10-ஆம் திகதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும், 11-ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளும் மோதவுள்ளன. இறுதிப் போட்டி 14-ஆம் திகதி நடைபெறும்.