மிரட்டலான பந்துவீச்சு.. முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த வங்கதேச வீரர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர் டைஜுல் இஸ்லாம் விரைவாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தி முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 453 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 84 ஓட்டங்கள் எடுத்தார்.
வங்கதேச அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் டைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் குறைந்த (36) டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன், இங்கிலாந்தின் ஸ்வான், தென் ஆப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் ஆகியோரின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.
அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வங்கதேச வீரர்கள் பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் (215) முதல் இடத்தில் உள்ள நிலையில், டைஜுல் இஸ்லாம் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.