தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்ட தைவான் காதல் ஜோடிகள்! இந்து முறைப்படி கரம்பிடித்தனர்
தைவான் நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிகள் இந்து முறைப்படி தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் காதல் ஜோடிகள்
தமிழக மாவட்டமான மயிலாடுதுறை, சீர்காழி அருகே கரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.
இந்நிலையில் நேற்று, இங்கு தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் யோங்சென் (36), ஆசிரியை ருச்சென் (30) ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தங்களது நாட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் இவர்கள் இந்துமுறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
இந்து முறைப்படி திருமணம்
அதற்காக சீர்காழிக்கு வந்த அவர்களுக்கு ஒளிலாயம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. மணப்பெண் ருச்சென் பட்டுச்சேலை, மாலை அணிந்தும், மணமகன் யோங்சென் பட்டு வேட்டி, மாலை அணிந்தும் மணமேடைக்கு வந்தனர்.
அங்கு மணமேடையில் யாகம் வளா்க்கப்பட்டு தமிழ் முறைப்படி மந்திரங்கள் கூற மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னா் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். அவர்களுக்கு, நண்பர்கள் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |