தாலிபான்களை உருவாக்கியதே இந்த நாடுதான்... அதன் மீது தடைகள் விதிக்கவேண்டும்: முன்னாள் கனேடிய அமைச்சர் காட்டம்
அமெரிக்கா தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றியதே தாலிபான்கள் ஆபாகானிஸ்தானை ஆக்கிரமித்ததற்கு காரணமாக கூறப்படும் நிலையில், கனேடிய முன்னாள் அமைச்சர் ஒருவர், வேறொரு நாட்டின்மீது குற்றம் சாட்டியுள்ளார்.
கனடாவின் முன்னாள் குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Chris Alexander, தாலிபான்கள் பிரச்சினைக்கு காரணம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களோ, ஆப்கானிஸ்தானியர்களோ அல்ல, பாகிஸ்தான்தான் என்று கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானும், அதன் உளவுத்துறையான ஐ எஸ் ஐ அமைப்பும்தான் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்கிறார் அவர்.
1990களில் பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ, தாலிபான்களை உருவாக்கியது என்றும், அதிலிருந்து தாலிபான்களை தங்கள் நாட்டின் வலிமையின் ஆயுதமாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ள Alexander, ஆப்கானிஸ்தானில் அமைதிய ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட தோஹா ஒப்பந்தத்தை பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது என்றும், அதை தனது காலனி போல நடத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார்.
கிழக்கு பாகிஸ்தானை இழந்ததை ஈடுகட்டுவதற்காக, 40 முதல் 50 ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்குள் போரைத் தூண்டி வருகிறது என்று கூறும் Alexander, மற்ற நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, பாகிஸ்தானை பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்கச் செய்யவேண்டும் என்றும் அதன் மீது தடைகள் விதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.