தாலிபான்களிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற அவர்களை முள்வேலிக்கு மேல் தூக்கி வீசும் தாய்மார்கள்: பிரித்தானிய வீரர் கண்ணீருடன் விவரிக்கும் சம்பவம்
காபூலில் விமான நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முள்வேலிக்கு வெளியே நிற்கும் ஆப்கானிஸ்தான் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றுவதற்காக, அவர்களை முள்வேலியைத் தாண்டி பிரித்தானிய இராணுவ வீரர்களிடம் வீசிய சம்பவம் குறித்து கண்ணீருடம் விவரித்துள்ளார் வீரர் ஒருவர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதும், இனிமேல் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பேட்டியளித்தார் ஒரு செய்தித்தொடர்பாளர். ஆனால், அவர் உறுதியளித்ததற்கு மாறாக அன்றையத்தினமே பெண்கள் சவுக்கால் அடிக்கப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகின.
எப்படியாவது பிரித்தானியாவுக்குத் தப்பிச் சென்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமானோர் காபூல் விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.
ஆனால், அவர்களை தாலிபான்கள் தாக்கத் தொடங்க, எப்படியாவது தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தில், என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்று கதறியபடி, விமான நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முள் வேலிக்கு மேலாக, குழந்தையைத் தூக்கி விமான நிலையத்துக்குள் நிற்கும் இராணுவ வீரர்களிடம் வீசியுள்ளார்கள் சில தாய்மார்கள்.
சில குழந்தைகள் வேலியைத் தாண்டி விமான நிலையத்திற்குள் விழ, சில குழந்தைகள் முள்வேலிக்குள்ளே விழுந்த பயங்கரத்தை தங்களால் விவரிக்க இயலாது என்கிறார் அங்கு காவலுக்கு நிற்கும் பிரித்தானிய பாராசூட் படை வீரர் ஒருவர்.
அன்று இரவு ஆகும்போது, எங்களில் கண்ணீர் விடாத ஒரு படைவீரர் கூட இல்லை என்கிறார் அவர்.
இதற்கிடையில், தங்கள் சுயரூபத்தைக் காட்டத்துவங்கிவிட்ட தாலிபான்கள் Jalalabad என்ற இடத்தில் பேரணியில் ஈடுபட்டவர்களை சுட்டதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.