மீண்டும் கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு.., சீமான் மீது வழக்கறிஞர் புகார்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில் கரூர் வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார்.
அவதூறு பேச்சு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பாடியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து பேசிய சீமான், "கள்ளச்சாராயத்தை விற்றவர்களை எல்லாம் கைது செய்யாமல் மேடையில் பாடியதற்காக கைது செய்கிறீர்கள். எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளீர்கள்? என்னை விடவா அவர் அதிகமாக பேசிவிட்டார்.
என்னை சுற்றியிருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பற்றி அவதூறாக பாடியதால் கைது செய்துள்ளார்கள்.
இருக்கிற பாட்டை பாடுவதில் என்ன தவறு இருக்கிறது. எழுதியவர், பாடியவரை விட்டுவிட்டு மறுபடியும் எடுத்து பாடியவரை கைது செய்கிறீர்கள். நான் இப்போது பாடுகிறேன், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்" என்று கூறியிருந்தார்.
சீமான் மீது புகார்
இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அவர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், "சாட்டை துரைமுருகன் கைது விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கருணாநிதி குறித்து இழிவாக பேசினார்.
இந்நிலையில், மீண்டும் நேற்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அதனை பார்ப்பவர்களுக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கருணாநிதிக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை நாடுவேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |