பேசும் கிளி கொடுத்த சின்ன துப்பு..!பிரித்தானியாவில் சிக்கிய மிகப்பெரிய போதைப்பொருள் கும்பல்!
பேசும் கிளியின் உதவியால் பிரித்தானியாவில் 15 கொண்ட போதைப்பொருள் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
போதை கும்பல் கைது
பிரித்தானியாவில் போதைப்பொருள் கும்பலை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனையில், 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கான தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிளாக்பூல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் “ஆபரேஷன் வாரியர்” என்ற பெயரில் லங்காஷயர் பொலிஸார் நடத்திய சோதனைகளின் முடிவில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், கிலோ கணக்கில் ஹெராயின், கோகெய்ன், பணங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிறையில் நடந்த தேடல் வேட்டை
கைது நடவடிக்கைகளுக்கு முன்னதாக, பிரித்தானியாவில் போதை வழக்கில் கைது செய்யப்பட்ட 35 வயதான ஆடம் கார்னெட்டினின் சிறை அறையை பொலிஸார் திடீர் சோதனையிட்ட போதில் இருந்து தொடங்கியுள்ளது. இந்த சோதனையின் போது அவர்களுக்கு செல்போன் ஒன்று கிடைத்துள்ளது.
அதில்,அவரது 29 வயது காதலி ஷானன் ஹில்டன், கூட்டாளிகள், டல்பிர் சந்து, ஜேசன் ஜெர்ராண்ட் ஆகியோர் குறித்த தகவலும், அவர்களின் குற்றத்திற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு பொலிஸார் அவர்களையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
பேசும் கிளியால் சிக்கிய போதை கும்பல்
விசாரணையின் போது டல்பிர் சந்து-வின் செல்போனில் மாங்கோ என்ற பேசும் கிளி குழந்தையுடன் விளையாடும் காட்சி இருந்துள்ளது.
இதில் முக்கிய விஷயம் எதுவென்றால், அந்த வீடியோவில் “பேசும் கிளி” போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய முக்கிய வார்த்தையான “இரண்டுக்கு 25”(two for 25) என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளது.
இதனின் அடிப்படையில் ஆதாரங்களை சேகரித்த அதிகாரிகள், முழு குற்றப்பின்னணியையும் கண்டுபிடித்துள்ளனர்.
மாங்கோ என்ற பேசும் கிளி கொடுத்த சின்ன துப்பின் காரணமாக கைது செய்யப்பட்ட 15 பேருக்கும் கிட்டத்தட்ட 103 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |