சுவிட்சர்லாந்தில் தலிபான்களின் சந்திப்பு: வெடிக்கும் சர்ச்சை
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்க பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை உலகின் எந்த நாடும் தலிபான்களின் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை பொறுத்தமட்டில், மொத்தமுள்ள 42 மில்லியன் மக்கள் தொகையில் சரிபாதி மக்கள் பட்டினியால் பரிதவிப்பதாக தெரிய வந்துள்ளது. 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிநாட்டு உதவிகள் அனைத்தும் மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பொதுமக்களுக்காக செலவிடும் 75% நிதியும் வெளிநாடுகளின் உதவி என்றே கூறப்படுகிறது.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், வெளிநாடுகளின் உதவிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெனீவாவில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தையில், தலிபான்கள் குறித்த விவகாரத்தை முன்வைப்பார்கள் என கூறப்படுகிறது.
அத்துடன், ஆப்கானிஸ்தானில் தற்போதைய மனித உரிமைகள் நிலை தொடர்பில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.