சுயநலமற்ற நடிகர்... எம்ஜிஆரின் தீவிர பக்தர்! திரைப்படம் முதல் தேர்தல் களம் வரையிலான மயில்சாமியின் பயணம்
தமிழ் திரைப்பட நடிகர், மேடை நாடக கலைஞர், மற்றும் மிமிக்கிரி நட்சத்திரம் என்ற பல்வேறு பரிமாணங்களை கொண்ட மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மிமிக்கிரி கலைஞர் முதல் திரைப்பட நடிகர் வரை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1965ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி பிறந்த மயில்சாமி முதலில் மேடை நாடகங்களில் தோன்றி மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டாக பல்வேறு தளங்களில் அடையாளம் காணப்பட்டு பின் திரைத்துறைக்குள் கால் பதித்தார்.
கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து கொண்ட நடிகர் மயில்சாமி, பின் முன்னணி கதாநாயகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு மற்றும் தனுஷ் என அனைவருடனும் திரையில் தோன்றி அசத்தினார்.
வெற்றி விழா, பணக்காரன், செந்தமிழ் பாட்டு, உழைப்பாளி, வால்டர் வெற்றிவேல் என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து தன்னை மெல்ல மெல்ல மயில்சாமி செதுக்கிக் கொண்டார்.
2021ல் உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்-உடன் இணைந்து பல்வேறு படங்களில் நடிகர் மயில்சாமி காமெடியில் கலக்கியுள்ளார். காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்காமல் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களை கவர்ந்துள்ளார்.
இவர் இறுதியாக கிளாஸ்மேட் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ளார். உயிரிழப்பதற்கு முன்பே டப்பிங் பணிகளை மயில்சாமி முடித்து விட்ட நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
நிஜ ஹீரோ மயில்சாமி
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஊரடங்கில் முடங்கி கிடந்த சூழலில், எந்தவொரு சிறிய தயக்கமும் இன்றி வீடு வீடாக சென்று மக்களுக்கு தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்தார்.
இதைப்போலவே சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்த போது, தண்ணீரில் இறங்கி நேரடியாக பல்வேறு உதவிகளை செய்தார்.
வறுமையால் வாடிய ஏழ்மை குழந்தைகளுக்கு கல்விச் செலவுக்காக பண உதவியும் வழங்கியுள்ளார்.
எம்.ஜி.ஆர் பக்தர்
மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்-அவர்களின் தீவிர ரசிகரான மயில்சாமி, பின்நாட்களில் எம்ஜிஆரின் தீவிர பக்தரானார்.
எம்ஜிஆரின் தாக்கத்தால் பிறருக்கு உதவும் குணம் கொண்ட இருந்த மயில்சாமி, எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவராகவும், தீவிர சிவன் பக்தராகவும் திகழ்ந்தார்.
தேர்தல் களம்
சமூக சேவைகளில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வந்த மயில் சாமி, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
ஆனால் போதிய வாக்குகள் கிடைக்காததால் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.