பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தேனா? தமிழ்ப்பட வில்லன் நடிகர் ராஜேந்திரநாத் விளக்கம்
நடிகர் மீசை ராஜேந்திரநாத் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்ததாக செய்தி வெளியான நிலையில், அவர் தற்போது அதனை மறுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்ற நடிகர் ராஜேந்திரநாத், முக்கூடல் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி, அவரது கார் மீது சிலர் கற்களை வீசி தாக்கி கண்ணாடியை உடைத்தனர். அதன் பின்னர் பொலிஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதும் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நடிகர் ராஜேந்திரநாத் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் முக்கூடல் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சிலர் மோசடி செய்கின்றனர். அவர்கள் கடவுள் பெயரை கூறி பணம் வசூலிப்பதை நான் தட்டிக்கேட்டேன். 10 ஆண்டுகளாக இதுதொடர்பாக நடைபெறும் வழக்குகள் தொடர்பிலான ஆவணங்களை நான் வைத்துள்ளேன். இந்த நிலையில் தான் நான் என் குடும்பத்தினருடன் சாமி கும்பிட கோயிலுக்கு சென்றேன். அப்போது அங்கே வெள்ளையடித்துக் கொண்டிருப்பது குறித்து கேட்டேன்.
அறநிலையத்துறையிடம் இதற்கு அனுமதி பெற்றார்களான என்று கேட்கவே, அர்ச்சகர் அதற்கு இல்லை என்று கூறினார். இவ்வாறு நான் பேசிக்கொண்டிருக்கும்போது மோசடி செய்யும் நபர்கள், நீ ஏன் சாமி கும்பிட வந்த? உன் அடித்துவிடுவோம், வெட்டி விடுவோம் என்றெல்லாம் மிரட்டினார்கள்.
அதன் பின்னர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். பின்னர் நான் வெளியே வரும்போது என் காரை அடித்து நொறுக்கிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளரிடம் நான் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பணமோசடி செய்வதை திசை திருப்பவே சிலர் இந்த வதந்திகளை கிளப்பி வருகின்றனர், இதுதான் உண்மை' என கூறியுள்ளார்.