சுவிஸில் நடந்த "தனித்தமிழ் தகையும் - உரையாடலும்" நூல் அறிமுக விழா
சுவிட்சர்லாந்தில் தமிழர் களறி மண்டபத்தில் "தனித்தமிழ் தகையும் - உரையாடலும்" எனும் தலைப்பிலான நூலின் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.
பேர்ணில் (25/09/2025) மாலை 06.30 மணிக்கு அகவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், பேராசிரியர் திருநாவுக்கரசு தாயுமானவர் எழுதிய மூன்று நூல்களின் அறிமுகமும், கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வினை பேர்ண் வள்ளுவன் பள்ளி, உலகத்தமிழ்மறை இயக்கம் மற்றும் தமிழர் களறி இணைந்து நடத்தியது. வரவேற்புரையினை பேர்ண் வள்ளுவன் பள்ளி முதல்வர் திரு.பொன்னம்பலம் முருகவேள் ஆற்றினார்.
அவர், 1996ஆம் ஆண்டிலிருந்து தனித்தமிழ் கொள்கையை பின்பற்றிய தனது பட்டறிவைக் (அனுபவத்தைக்) கூறி, தமிழர்கள் பிறமொழிச் சொற்களை தவிர்த்து தூயதமிழில் பேசவும் எழுதவும் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மறைமலையடிகளின் பங்களிப்பு
1916ஆம் ஆண்டு தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் குறித்து நிகழ்வில் விரிவாகப் பேசப்பட்டது. வடமொழிச் சொற்களின் தாக்கத்திலிருந்து தமிழை பாதுகாக்க மறைமலையடிகள் முன்னெடுத்த பணி, திருவள்ளூர் ஆண்டு, திருநாள், செம்மொழி அங்கீகாரம், இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் போன்ற பல வரலாற்றுச் செயல்கள் நினைவுகூரப்பட்டன.
நூல் அறிமுகம்
மறைமலை அடிகளாரை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட மூன்று நூல்கள்:
- தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்
- தனித்தமிழ் தந்தையின் வரலாற்றுச் சுவடுகள்
- மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு
இவற்றின் உள்ளடக்கத்தை நூலாசிரியர் தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார். தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் எனும் வேண்டுகையையும் அவர் முன்வைத்தார்.
நூல்களின் சிறப்புப் படிகளை பேர்ண் வள்ளுவன் பள்ளி சார்பில் திரு.பொன்னம்பலம் முருகவேள், தமிழர் களறி சார்பில் எழுத்தாளர் திருமதி.ஆதிலட்சுமி சிவகுமார் மற்றும் திரு.முதலியார் செந்தூர்ச்செல்வன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கலந்துரையாடல் மற்றும் நிறைவு
நூலாசிரியருடன் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. பங்கேற்றோர் தங்கள் பின்னூட்டங்களை பகிர்ந்து, மறைமலையடிகள் குறித்த புதிய தகவல்களையும் அறிந்துகொண்டனர்.
நிகழ்வின் நிறைவில் தமிழர் களறி சார்பில் திரு.தில்லையம்பலம் நன்றி உரையாற்றினார். இரவு 8.15 மணிக்கு நிகழ்ச்சி தமிழ் உரையாடல் மற்றும் கருத்துப் பகிர்வுடன் நிறைவுற்றது.
நிறைவில், அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் ஒன்பானிரவுத் விழாவில், திருநிறை.மறை.திருநாவுக்கரசு தாயுமானவன், செந்தமிழ் அருட்சுனையர் சிவருசி.தர்மலிங்கம், சசிக்குமார் மற்றும் பேர்ண் வள்ளுவன் பள்ளி முதல்வர் திருநிறை.பொன்னம்பலம் முருகவேள் அவர்கள் இருவராலும் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |