தன் மீது தானே தீவைத்துக்கொண்ட இலங்கைத் தமிழர்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள துயர சம்பவம்
இலங்கைத் தமிழர் ஒருவர், அவுஸ்திரேலியாவில், தன் மீது தானே தீவைத்துக்கொண்டு உயிரிழந்துள்ளதைக் குறித்த அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ள செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
தன் மீது தானே தீவைத்துக்கொண்ட இலங்கைத் தமிழர்
மனோ யோகலிங்கம் (23) என்னும் இலங்கைத் தமிழரான புகலிடக் கோரிக்கையாளர், ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி, தன் மீது தானே தீ வைத்துக்கொண்டுள்ளார்.
யோகலிங்கம் உடலில் 80 சதவிகிதம் அளவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்த சுமார் 8,500 பேருக்கு நிரந்தர விசா வழங்குமாறு அரசை வலியுறுத்தி மெல்போர்னில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டது.
45 நாட்களாக நடைபெற்ற அந்த போராட்டத்துக்கு யோகலிங்கம் தலைமை வகித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு, கடுமையான துன்புறுத்தல்களிலிருந்து தப்புவதற்காக, இலஙகையிலிருந்து படகு மூலம் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்றார் யோகலிங்கம்.
தனது குடும்பத்தினருடன் மெல்போர்னில் குடியேறி தற்காலிக விசாவில் வசித்துவந்தார் அவர்.
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த ஆயிரக்கணக்கான பிற அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களைப் போலவே, தங்கள் விசா நிலை, தங்கள் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பிற சவால்களுடன் இடைவிடாத நிச்சயமற்ற தன்மையுடன், சட்டக் குழப்பத்தில் வாழ்ந்துவந்தனர் யோகலிங்கம் குடும்பத்தினர்.
2012 ஆகத்து முதல், 2013 ஜூலை வரை படகு மூலம் புகலிடக்கோரிக்கையாளர்களாக அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்கள், அவுஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற முடியாத வகையில், அந்நாடு விதிகளை உருவாக்கியுள்ளது.
அந்த காலகட்டத்தில்தான் யோகலிங்கம் குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |