தமிழ் என்றாலே கெத்து - தனித்தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் விஜய்
தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படவேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழக அரசு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுதான் நடைமுறையாக இருந்தது.
ஆனால், தவெக அரசு ஆட்சியமைத்த பின்னர், மத்திய அரசின் வழிகாட்டுதல் என்ற பேரில், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆகிய நிகழ்வுகளில் வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது சர்ச்சையானது.

தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும் என தவெக அரசு உறுதியளித்தாலும், சமீபத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடலான "நீராடும் கடலுடுத்த" என்ற பாடலை பாடிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைகழகத்திலே தமிழ்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட வேண்டும் என தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ் என்றாலே கெத்து
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், "மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும். ஆனால் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. அது நமது உயிர். நமது உணர்வு.

நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசம் நேசம் எல்லாமும் நமக்குள் உணர்வாக தோன்றுவதுபோல தமிழும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தாய் எப்படியோ அதுபோல தான் தாய் மொழியும்.
நம் தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் என்றால் நம் எல்லாருக்குமான தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும். தாயை போற்றுகிற வாழ்த்துகிற சமூகம் தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விடும். விடாது. விடவும் மாட்டோம்.
நமது தமிழ்த்தாய் வாழ்த்தை 1891 இல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக பாடினார்.
இன்று தமிழ் பேசும் மக்கள் இல்லாத நாடுகளே குறைவுதான். தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது?. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒருசிந்தனை, அது ஒரு அன்பு. தமிழ் என்றால் விருந்தோம்பல். சுருக்கமாக தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர்.
ஒரு கட்சிக்கு பிரச்சனை என்றால் அந்த கட்சி மட்டுமே போராடும். ஆனால் தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடே வந்து நிற்கும். அதனால் தான் தமிழ் என்றால் உயிர், உணர்வு. உலகில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் மறைந்தன. ஆனால் தமிழ் நீடித்து நிற்கும் ஒன்று.

தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும் தமிழின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் உயரிய பணியில் பணியில் இந்த பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைத்து, அனைத்து பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என பேசினார்.
இந்த தீர்மானத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரித்த நிலையில், தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |