தமிழ்நாட்டில் சூப்பர் எல் நினோவால் விவசாயம் பாதிக்கும் - வேளாண் பட்ஜெட்டில் கூறிய அமைச்சர்
தமிழ்நாட்டில் சூப்பர் எல் நினோவால் விவசாயம் பாதிக்கும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட்
நேற்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து இன்று சட்டமன்றத்தில் வேளாண்மை துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தனர்.
உரையை தொடங்கிய அமைச்சர் வினோத், நீண்ட நேரமாக முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்ததால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, உரையில் உள்ளதை மட்டும் வாசிங்க என சபாநாயகர் அறிவுறுத்திய பின்னர் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.
விவசாயிகளுக்கான மும்முனை இலவச மின்சாரம் தொடரும். விவசாயிகளின் மும்முனை மின்சார திட்டத்துக்கு ரூ.7,432 கோடி மின்வாரியத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எல் நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் கிடைக்கும் வகையில் AI அடிப்படையிலான உழவர் செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.
மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும். மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருது ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும்.
அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தொழில்நுட்பமும், பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மழை, வெயிலிலிருந்து விளைப் பொருட்களை பாதுகாக்க 43,500 தார்ப் பாய்கள் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க ரூ.7.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |