நீட் தேர்வு அகற்றப்படவேண்டும்: ராகுல்காந்தி கைது ஜனநாயகத்திற்கு எதிரானது - முதலமைச்சர் விஜய்
நீட் தேர்வு குளறுபடியை எதிர்த்து போராடிய ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை
டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ்தள பதிவில், "நீட் தேர்வு குளறுபடியை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது, அவர்களது குடும்பங்களையும் வெகுவாக பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்க மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |