தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனு
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி கைது முதல் நீதிமன்ற காவல் நீட்டிப்பு வரை
செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்பு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை 5 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்படுவார் என்று உத்தரவிடப்பட்டது. பின்பு, செந்திபாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதன்பிறகு, இவரது வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை நீட்டித்தும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 15 -ம் திகதி வரை காவல் நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமின் கோரி மனு
நேற்று, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் கோர முடியாது என்றும், ஜாமின் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் இளங்கோ, நீதிபதி அல்லி முன்பு முறையீடு செய்தார். இதற்கு நீதிபதி அல்லி, இந்த மனுவை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக கூறினார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நாளை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |