69 பந்துகளில் சதம் விளாசிய ஷாருக் கான்! வெற்றி வாகை சூடிய தமிழக அணி
தமிழக அணியில் சென்னையைச் சேர்ந்த ஷாருக் கான் 69 பந்துகளில் சதம் அடித்தார்
வங்கதேச லெவன் அணியின் தரப்பில் டௌஹித் 73 ஓட்டங்கள் விளாசினார்
வங்கதேச லெவன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தமிழக அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழக அணிக்கும், வங்கதேச லெவன் அணிக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச லெவன் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தமிழக அணியில் நாராயண் ஜெகதீசன் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், லட்சுமேஷா சூர்யபிரகாஷ் 42 ஓட்டங்களும், சாய் சுதர்ஷன் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆறாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷாருக் கான் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார். அதிரடியில் மிரட்டிய அவர் 69 பந்துகளில் சதம் விளாசி களத்தில் நின்றார். சஞ்சய் யாதவ் 26 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில், தமிழக அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய வங்கதேச லெவன் அணி 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வி ஜெயதேவன் விதிமுறைப்படி தமிழக அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.