தொடங்கிய 5 நாள்களிலே நிறுத்தப்படும் தமிழ்நாடு TO இலங்கை கப்பல் சேவை
தமிழக மாவட்டம், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாளை மறுதினம் முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு TO இலங்கை கப்பல்
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்து, அதற்காக ரூ.3 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சியில் கப்பல் கட்டும் பணி நடைபெற்று, முடிவடைந்து ‘சிரியா பாணி’ என பெயரிடப்பட்டது. இது, 150 பயணிகள் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் 3.30 மணி நேரத்தில் இலங்கை செல்லலாம். இதற்கான பயண கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ. 6500 மற்றும் 18 % ஜிஎஸ்டி வரியோடு ரூ.7670 நிர்ணயிக்கப்பட்டது.
நிறுத்தம்
கப்பல் போக்குவரத்து அக்டோபர் 14 -ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம், தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
இந்த கப்பலில் போதுமான பயணிகள் பயணம் செய்யாததால், வாரத்தில் 3 நாள்கள் மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கப்பல் போக்குவரத்து சேவை நாளை மறுதினம் (அக்.20) முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி மாதம் மீண்டும் கப்பல் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே, இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள பயணிகள் காங்கேசன் துறைமுகத்தை நோக்கி வருகின்றனர் என தகவல் வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |