தமிழ்நாட்டிற்கு வந்த இலங்கை பெண்ணின் கண்ணீரை துடைத்த தமிழக பெண்! நெகிழ்ச்சி தருணம்
தமிழகத்திற்கு படகில் வந்த இலங்கை பெண்ணிற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவ்வப்போது தமிழகத்திற்கு கப்பல், படகு மூலம் இலங்கை மக்கள் வருகை புரிகின்றனர். இந்த நிலையில் இருநாட்டு கடற்படையின் பாதுகாப்பையும் மீறி, நேற்று நள்ளிரவில் வவுனியா மற்றும் திருகோணமலையில் இருந்து இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் பைபர் படகின் மூலம் தமிழகம் வந்துள்ளனர்.
அவர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வந்திறங்கினார். அப்போது தங்கள் நிலை குறித்து இலங்கை பெண் புலம்பி அழுதபோது, தமிழக பெண்ணொருவர் அவரது கண்ணீரை துடைத்தார்.
மேலும், இந்தியா வந்துடீங்க, இனி நல்லா இருப்பீங்க என்று ஆறுதல் கூறியதற்கு, இலங்கைப் பெண் நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் படகில் வந்த இலங்கை மக்கள் ஏழு பெரும் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கை பெண்ணின் கண்ணீரை தமிழக பெண் துடைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.