ஒடிசா கோர ரயில் விபத்து இப்படி தான் நடந்தது: உயிர் தப்பிய தமிழக பயணியின் வீடியோ
ஒடிசா ரயில் விபத்தில் உயிர் தப்பிய தமிழக பயணி ஒருவர் விபத்து நடந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய துயர சம்பவம்
இந்திய மாநிலம் ஒடிசாவில் சரக்கு ரயில் மற்றும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிக்கொண்ட கோர விபத்து நாட்டையே உலுக்கியிருக்கிறது.
இதுவரை 288 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், மீட்புப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கோர விபத்தில் உயிர் தப்பிய தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் துயர சம்பவம் குறித்து பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழக பயணியின் வீடியோ
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற அந்த பயணி, தானும் மீட்புப்படை வீரர் தான் எனக் கூறியுள்ளார். விபத்து குறித்து அவர் பேசுகையில்,
'கோரமண்டல் ரயிலில் பயணித்தேன். 6.15க்கு ரயில் பாலாசூர் வந்தது. அங்கிருந்து கிராஸ் ஆகி 15 நிமிடத்தில் டெல்லியில் இருந்து வந்த ரயில் இதற்கு எதிரே வந்தது.
அதற்கு பக்கத்தில் ஒரு சரக்கு வண்டியும் வந்தது. இரண்டு ரயில்களும் இடையில் சரக்கு ரயில் உள்ளே புகுந்ததால், மூன்றும் விபத்தில் சிக்கின.
கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் இறந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நானும் மீட்புப்படை வீரர் தான், அதனால் அந்த பணியில் ஈடுபட்டுள்ளேன். என் அணியினர் இவர்கள்.
நான் பி7யில் இருந்தேன், பி6 வரை எல்லாம் விபத்தில் சிக்கிக்கொண்டது. ஜெனெரல் பெட்டியில் இருந்த ஒருவரும் தப்பிக்கவில்லை, எல்லாரும் இறந்து கிடக்கிறார்கள், நிறைய சடலங்கள் கிடக்கின்றன. உடனே நான் என் குழுவின் கமாண்டருக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்.
அங்கிருந்து கொல்கத்தாவுக்கு சொல்லி, பக்கத்தில் இருந்த பேரழிவு மேலாண்மைக்கு போன் பண்ணி சொல்லி அரைமணி நேரத்தில் மீட்புப்படை இங்கு வந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்த பணி இரண்டு நாள் வரை முடிவடையாது' என்றார்.